புலிக்கொடியுடன் ஆயுதங்கள் மீட்பு: சந்தேகநபர்களுக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பு...

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் புலிக்கொடி, சீருடை மற்றும் கிளைமோர் குண்டு என்பவற்றுடன் கைதான சந்தேகநபர்களுக்கு, இராணுவ புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் பொலிஸாரின் புலன் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் கடந்த வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன்போது சந்தேகநபரொருவர் தப்பியோடியிருந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை வரையில் சம்பவம் தொடர்பில் மொத்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தப்பியோடியவரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது என புலன் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், விசாரணையில் வெளிவந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சிலர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் என தெரியவந்துள்ளது.

மேலும், சிலர் இராணுவத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ள நிலையில் அதிலொருவருக்கு இராணுவத்தினரால் மாதாந்தம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.