திருகோணமலை பொது வைத்தியசாலையில் அசாதாரண நிலை!

Report Print Abdulsalam Yaseem in பாதுகாப்பு

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, சீனக்குடா விமான நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இரண்டு பேரையும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பகுதியைச் சேர்ந்த கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவில் உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் 48 வயதுடைய இல்யாஸ் முஸவ்பில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா டிப்போவில் கடமையாற்றும் 39 வயதாகிய ஏ.ஆர்.நசுறுல்லாஹ் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் உதவிக்கல்வி பணிப்பாளரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டார்.

எனினும் அங்கு கடமை புரியும் பணியாளர்களின் கவனயீனம் காரணமாக அவரை இதுவரை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் படுகாயமடைந்தவரின் உறவினர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.