முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Abdulsalam Yaseem in பாதுகாப்பு

திருகோணமலை - மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஜலால்தீன் ஜாபீர் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன் தேன் எடுக்கச் செல்ல ஆயத்தமானபோது, அவருடன் சென்றவரை குளவி தாக்கியதாகவும் அதனையடுத்து வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகுமாறு அப்பயணத்தில் சென்ற முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரின் பேச்சை கேட்காமல் தேன் எடுத்து விட்டே செல்வோம் எனக் கூறிவிட்டு காட்டுக்குள் சென்ற நபரை கரடி ஒன்று மறைந்திருந்து தாக்கியதாகவும், இதனால் அவருடைய கண் பகுதியில் அதிகளவு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபரை உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவரது கண்ணில் பாரிய காயம் ஏற்பட்டிருப்பதினால் மேலதிக சத்திர சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.