வடக்கில் விரிவடையும் இராணுவ அதிகாரம்!

Report Print Habil in பாதுகாப்பு

வடக்கிலும் தெற்கிலும் இப்போது பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்ற ஒரே விடயம் போதைப்பொருள் கடத்தல், விற்பனை பயன்பாடு தான்.

வடக்கில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது போலவே தெற்கில் நூற்றுக்கணக்கான கிலோ ஹெரோயின், கொக்கேய்ன் போன்றவை ஒரே தடவையில் சிக்குவதும் சாதாரணமாகி விட்டது.

இலங்கைத் தீவு இப்போது போதைப்பொருள் கேந்திரமாகி விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

வெறுமனே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக மாத்திரமன்றி அதனைப் பயன்படுத்துவோரை அதிகம் கொண்ட இடமாகவும் இது மாறியிருக்கிறது.

ஆசியாவில் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல்கள் மற்றும் அதனைச் சார்ந்த மாபியா குழுக்கள் அதிகமுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருந்து வந்தது பிலிப்பைன்ஸ். கடந்த 50 ஆண்டுகளாக இங்கு போதைப்பொருள் குற்றங்கள் சர்வ சாதாரணம்.

2016ம் ஆண்டு அங்கு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரொட்ரிக்கோ ருடேட் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தார்.

இதன் ஒரு கட்டமாக 2016ம் ஆண்டுக்குப் பின்னர் 4200க்கும் மேற்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் கேள்விக்கிடமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். இது அரசாங்க புள்ளிவிபரம். இதைவிட உண்மையான எண்ணிக்கை அதிகம் என்கிறது எதிர்க்கட்சி. இந்த நடவடிக்கையால் அங்கு இப்போது போதைப்பொருள் குற்றங்கள் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.

அதே பாணியைத் தான் இப்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரியும் கையில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் போலும். அதற்காக அவர் இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்த எண்ணியுள்ளார்.

முதலாவது போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போட்டு இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி அடக்குவது,

இரண்டாவது முப்படைகளுக்கும் பொலிஸ் அதிகாரத்ததைக் கொடுத்து குற்றங்களைத் தடுப்பது. இதற்காக பொலிஸாருக்குள்ள சில அதிகாரங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முப்படையினருக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்த இரண்டு விடயங்களுமே எந்தளவுக்கு போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த உதவுமோ அதேயளவுக்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கும் ஆபத்தானதும் கூட.

1976ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறை பின்னபற்றப்படவில்லை. மீண்டும் அதனை போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பது என்ற சாட்டில் நடைமுறைப்படுத்த முற்படும் போது ஏனைய காரணங்களுக்காக அத்தகைய தண்டனை நிறைவேற்றப்படுவதும் வழக்கமாகி விடும்.

அது நவீன உலகில் மனித உரிமைகளுக்கு எதிரானது.

அதேவேளை முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுவது கூட அபாயகரமானது தான்.

அவசர கால சட்டத்தின் கீழ் முப்படையினருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்கள் எந்தளவுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை நேரடியாக அதிகளவில் அனுபவித்தவர்கள் தமிழர்கள் தான்.

மீண்டும் பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்கப்படுவதானது வடக்கு கிழக்கில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் வடக்கில் முப்படையினர் தமது முகாம்களுக்குள்ளேயே பெரும்பாலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் அதிகம் நடமாடுவது குறைக்கப்பட்டுள்ளது. சிவில் செயற்பாடுகளில் இருந்து அவர்கள் பெரிதும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் நல்லிணக்கத் திட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் வேறு விதமான தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

இந்தநிலையில் வடக்கில் ஓரளவுக்காவது முடக்கி வைக்கப்பட்டுள்ள முப்படையினரை அவர்களுக்கு வழங்கப்படப் போகும் பொலிஸ் அதிகாரம் வெளியே கொண்டு வருவதற்கு உதவப் போகிறது.

யாழ்ப்பாணத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து மோசமான குற்றச் செயல்கள் அதிகரித்த போது முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள படையினரை வெளியே வரவிட்டு பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருநந்தார்.

அவர் கூறியது போல போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பது என்ற பெயரில் முப்படையினர் மீண்டும் வெளியே வரும் சூழல் உருவாக்கப்படவுள்ளது.

முப்படையினருக்கும் வழங்கப்படும் பொலிஸ் அதிகாரங்கள் மூலம் அவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகளை பிடிக்கின்றனரோ இல்லையோ அதைக் காரணம் காட்டி முகாம்களுக்கு வெளியே தமது நடவடிக்கையை பகிரங்கமாக முன்னெடுக்க முடியும்.

இது வடக்கில் உள்ள மக்களின் இயல்பு வாழ்ககைக்கு தடையாக அவர்கள் மீது திணிக்கப்படும் ஒருவித அடக்குமுறையாக மாறும் சாத்தியங்கள் உள்ளன.

அதற்கு உதாரணமாக ஒரு விடயத்தைக் கூறலாம். வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்ட பின்னர் யாழ் நகரப் பகுதியிலுள்ள இராணுவ முகாம்களை மூடிவிட்டு அங்குள்ள படையினரை யாழ். கோட்டைக்குள் நிலைகொள்ள வைக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ் கோட்டை நெதர்லாந்து உதவியுடன் புனரமைக்கப்பட்டு ஒரு பாரம்பரிய மரபுரிமைச் சொத்தாகப் பேணப்படுகிறது. தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களை சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் . ஆனால் அத்தகையதொரு யாழ். கோட்டையில் இராணுவத்தைக் குடியமர்த்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதியளித்திருக்கிறது.

யாழ்.கோடம்டைக்குள் 6 ஏக்கர் காணிகளை வழங்கி அங்கு முகாம் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர் வடக்கு மாகாண ஆளுநர்.

யாழ்.கோட்டையில் இராணுவத்தைக் குடியமர்த்தும் திட்டத்திற்கு வடக்கு மாகாண சபை, யாழ். மாநகரசபை என்பன எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதனை ஆளுநரோ அரசாங்கமோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

யாழ் கோட்டையில் இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. இதனை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் ரெஜினோல்ட் குரே.

யாழ் குடாநாட்டு வழியாகவே நாட்டிற்குள் அதிகளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதனைத் தடுப்பதற்கு யாழ் கோட்டையில் இராணுவ முகாம் அமைக்கப்படுவது அவசியம் என்று அவர் கூறியிருக்கிறார்.

யாழ் கோட்டையில் முகாம் அமைத்து விட்டால் யாழ் குடாநாட்டில் போதைப்பொருள் கடத்தல் முற்றாகவே கட்டுப்படுத்தபட்டு விடும் போலுள்ளது அவரது வாதம்.

ஆனையிறவில் முகாமை அமைப்பதற்கு இப்படியொரு காரணத்தைக் கூறினால் ஏற்கலாம். ஏனென்றால் அதுதான் குடாநாட்டின் பிரதான நுழைவாயில்.

ஆனால் யாழ் கோட்டை என்பது தனியே தீவுப் பகுதிக்கான நுழைவாயில் மட்டும் தான். அங்கிருந்து கொண்டு ஒட்டுமொத்த போதைப்பொருள் கடத்தலையும் தடுக்கலாம் என்பது பொய் வாதம்.

அதைவிட இப்போதும் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்கள் வடக்கு கடல் வழியாகவே நடக்கிறது. மாதகல் வடமராட்சிப் பகுதிகள் கடத்தல் கேந்திரங்களாகவே இருக்கின்றன. அங்கெல்லாம் கரையோரப் பகுதிகளில் இராணுவம், கடற்படை என்பன முகாம்களை அமைத்திருக்கின்றன.

ஆனாலும் அவர்களால் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்க முடியவில்லை. இந்தநிலை இப்போது மாத்திரமல்ல ஆயுதப் போராட்டம் தொடங்கப்படுவதற்கு முற்பட்ட காலத்திலிருநந்தே காணப்பட்டது.

தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் கள்ளக் கடத்தல் என்று அழைக்கப்பட்ட தொழில் அந்தக் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தது. போதைப்பொருள் கடத்தல்கள் அப்போது அரிதுதான்.

சுங்கத் தீர்வை செலுத்தாமல் இந்தியாவில் உள்ள பொருட்களை இலங்கைக்கும் இலங்கையில் உள்ள பொருட்களை இந்தியாவுக்கும் கடத்தும் நடவடிக்கையே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தடுக்க மாதகலிலும் தொண்டமானாற்றின் அக்கரையிலும் கரையோரப்பகுதிகளில் சிறியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன். ஆனாலும் கடத்தல்களைத் தடுக்க முடியவில்லை.

விடுதலைப் புலிகள் தடுக்கும் வரையில் வடக்கில் கள்ளக்கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இராணுவ முகாம்களை அமைத்துத் தான் கடத்தல்களைத் தடுக்க முடியும் என்பது பொய்யான வாதம். விடுதலைப் புலிகளிடம் இருநந்த ஆளணி வளத்தை விட பல மடங்கு ஆளணி வளமும் முகாம்களும் வடக்கில் தற்போது படையினருக்கு இருக்கிறது. நவீன தொடர்பாடல் வசதிகள் கண்காணிப்பு கருவிகள் இருக்கின்றன.

ஆனாலும் குடாநாட்டின் வழியாகத்தான் பெருமளவு பொதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுகின்றன என்று ஒரு ஆளுநர் வெட்கமின்றிக் கூறுகிறார்.

போதைப்பொருள் கடத்தல்களை நேரடியாகத் தடுப்பதற்கு தலையிடுவதற்கு படையினருக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அவர்களிடமுள்ள நவீன தொழில் நுட்பங்களின் மூலமும் புலனாய்வு வலையமைப்பு மூலமும் பொலிஸாருக்கு தகவல்களைப் பகிர்ந்து அதனைக் கட்டுப்படுத்த உதவுவதில் எந்தத் தடையும் இல்லையே.

இத்தகைய எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் யாழ் கோட்டையில் இராணுவத்தைக் குடியமர்த்தினால் போதைப்பொருள் கடத்தல்கள் முடிவுக்கு வந்து விடும் போல நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர்.

பொலிஸாருக்குரிய அதிகாரங்களை முப்படையினருக்கு வழங்கினால் இதுபோன்று தான் பொய்யான நியாயப்படுத்தல்கள் நடக்கும். அத்துமீறல்கள் நிகழும். சிவில் செயற்பாடுகள் மீதான இராணுவ மயமாக்கல் இன்னும் தீவிரமாகும்.

இது இவ்வாறிருக்க கடந்த மாத பிற்பகுதியில் வடக்கில் சமூக விரோத குற்றச்செயல்கள் திடீரென மீண்டும் அதிகரித்து மூன்று வாரங்களுக்குப் பின்னர் கடந்த செவ்வாயக்கிழமை தான் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் அங்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருநந்தார்கள்.

இவர்களுடன் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டாரவும் சென்றிருந்தார். விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் குற்றச்செயல்கள் நடக்கவேயில்லை என்று விஜயகலா மகேஸ்வரனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏன் தமிழ் மக்களும் கூறுவதை இவரைப் போன்றவர்களால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.

யாழ்ப்பாணம் வந்திருந்த போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரதியமைச்சர் நளின் பண்டார விடுதலைப் புலிகளின் காலத்தில் கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற குற்றச்செயல்களே நடக்கவில்லை என்று கூறுவது தவறானது. அது அவர்களின் அறியாமை தான் என்று கூறிவிட்டுப் போயிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இத்தகைய எந்த அச்சுறுத்தல்களும் இல்லாமல் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் சாட்சியாக வாழும் மண்ணில் நின்று தான் அறியாமை பற்றிப் பேசிவிட்டுப் போயிருக்கிறார் அவர். அந்த அறியாமை யாருக்கு என்று அவருக்குத் தெரியவில்ரைல.

இப்படிப்பட்ட அறியாமைகள் ஆட்சி செய்வது தான் இன்றைய நிலைக்கு காரணம் போலும்.

விடுதலைப் புலிகளின் மீதான காழ்ப்புணர்வு, உண்மையை ஏற்றுக்கொள்ளும் உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை இவர்களுக்கு இல்லாமல் செய்து விட்டது.

அதேவேளை போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் இப்போது அதிகரித்துள்ள குற்றங்களைக் கட்டுப்படுத்துமோ இல்லையோ என்று தெரியாது.

ஆனால் இதனைப் பயன்படுத்தி வடக்கில் இராணுவ மயமாக்கலும் அதன் அதிகாரமும் இன்னமும் விரிவடையப் போகிறது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.