அம்பாந்தோட்டையில் இந்தியாவின் கரிசனை!

Report Print Subathra in பாதுகாப்பு

சீனாவின் கைக்குச் சென்று விட்டதாக சர்வதேச அளவில் பேசப்படுகின்ற அம்பாந்தோட்டையில் மத்தள விமானநிலையத்தையாவது தக்கவைப்பதே இப்போது இந்தியாவின் முதலாவது தெரிவாக இருக்கும் என்பது பலரதும் கணிப்பு.

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஈடான பாதுகாப்பு நலன்களை மத்தள விமானநிலையத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதே இந்தியாவின் கணிப்பாகத் தெரிகிறது.

இதனால் மத்தள விமானநிலையத்தின் 70 வீதப் பங்குகளை குத்தகைக்குப் பெற்று 40 ஆண்டுகளுக்கு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுவதை விட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் தடுப்பதில் தான் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.

காலியில் உள்ள தென்பிராந்திய கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை பாராளுமன்றில் வெளியிட்ட பின்னர் கடந்த 13ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தில் அவர் நிகழ்த்திய உரை முக்கியமானது.

அந்த உரை வெறுமனே காலியில் உள்ள கடற்படைத் தளத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுவதைப் பற்றியதாக மாத்திரம் இருக்கவில்லை.

பூகோள அரசியல் பிராந்திய பாதுகாப்புச் சிக்கல்கள் அதில் இலங்கையின் வகிபாகம் என்பனவற்றையும் தொட்டுச் சென்றிருநந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

மோதல்களைத் தடுப்பது மற்றும் இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் போன்ற பாதுகாப்பு கரிசனைகள் விடயத்தில் புதிய தந்திரோபாயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கடற்படையிடம் அரசாங்கம் கேட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பிரச்சினைகளையும் மோதல்களையும் தடுப்பதற்கு புதிய உத்திகள் தேவைப்படுகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்திடமே இருக்கும் என்று உடன்பாட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சீன நிறுவனம் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தெற்கிலுள்ள அனைத்து கட்டளை மையங்களும் காலியில் இருந்து அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பை நாம் கவனிப்போம்.

எனவே புதிய உத்திகளில் கவனம் செலுத்துமாறு நாம் கடற்படைக்கு கூறியுள்ளோம். அம்பாந்தோட்டையை தளமாகப் பயன்படுத்த சீனாவுக்கு இடமளிக்கப்படாது.

மத்தள விமானநிலையத்தை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கவுள்ளோம். எனவே எல்லாவற்றையும் சீனாவுக்கு கொடுத்து விட்டதாக யாரும் குற்றஞ்சாட்ட முடியாது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அனைத்துப் பங்காளர்களையும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதே எமது இலக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து மத்தள விமானநிலையத்தைக் கொடுத்து இந்தியாவைச் சமாளிக்கவும் பிராந்தியத்தில் மோதல்களைக் குறைக்கும் பாதுகாப்பு உத்திகளைக் கையாளவும் இலங்கை அரசாங்கம் முற்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டுவதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்பட்டதன் பின்னரே இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மோசமான அதிகாரப் போட்டிக் களமாக மாறியது. அது இப்போது மெது மெதுவாக சூடேறி வருகிறது.

இது பிராந்தியப் பதற்றமாக மாறினால் அதற்காக இலங்கையும் விலைகொடுக்க நேரிடும். பொறுப்புக்கூறும் நிலை இலங்கைக்கும் ஏற்படும். அதனைக் கருத்தில் கொண்டுதான் இப்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மோதலர்கள் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கான உத்திகளை கையாளுமாறு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது அரசாங்கம்.

அதன் ஒரு கட்டம் தான் காலியில் உள்ள இலங்கைக் கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளது என்ற தகவல்.

தற்போதைய அரசாங்கம் கடந்த பல மாதங்களாகவே காலி கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும் என்று கூறி வருகிறது. ஆனால் அது இன்னமும் சாத்தியமாகவில்லை. உடனடியாகவும் சாத்தியப்படும் போலவும் தெரியவில்லை.

இருந்தாலும் காலியில் உள்ள கடற்படைத் தளத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றும் திட்டம் இந்தியாவைப் பெரிதும் திருப்திப்படுத்தும் ஒன்றாக இந்தியாவினால் வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

காலி கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்பட்டால் அது இந்தியாவுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தனர்.

ஏனென்றால் இலங்கைக் கடற்படைத் தளம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் அங்கு கிரமமான துறைமுகப் பயணங்களை மேற்கொள்ளும் வாயப்பு கிட்டும் என்று தமது பெயரை வெளியிட விரும்பாத அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இந்தியா கண்காணித்து வருகிறது. ஆனால் அம்பாந்தோட்டையில் இலங்கை கடற்படைத் தளம் அமைக்கப்பட்டால் இப்போதுள்ள கண்காணிக்க முடிவதைவிட கூடுதலாகக் கண்காணிக்க முடியும்.

இது சீனாவின் செயற்பாடுகளில் சில தடுப்பு விளைவுகளை ஏற்படுத்தும் அத்துடன் இராணுவம் அல்லாத தேவைகளுக்கு துறைமுகத்தை பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை இது இந்தியாவின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்படும் முடிவாகக் கூட இருக்கலாம்.

இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புகள் உடனடியாகச் செயற்படுத்தப்படும் வாயப்பு இல்லை என்பதே இந்தியாவின் கண்காணிப்பாகவும் இருக்கிறது.

அம்பாந்தோட்டைக்கு கடற்படைத் தளத்தை மாற்றுவதற்கு உதவியாக எந்த உட்கட்டமைப்பு வசதிகளும் கிடையாது கடற்படையின் கப்பல்களையோ படகுகளையோ பழுது பார்க்கும் வசதிகள் இல்லை. கப்பல்களை கரையில் இருந்து கடலுக்கும் கடலில் இருந்து கரைக்கும் ஏற்றுகின்ற வசதிகளும் அதற்கான இடவசதிகளும் கிடையாது.

அங்கு இலங்கைக் கடற்படைக்கு ஓர் இறங்குதுறை கூட இல்லை. இப்படியான நிலையில் உடனடியாக கடற்படைத் தளத்தை அங்கு அமைக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதே இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே கிழக்குப் பக்கமாகத் தான் கடற்படைக்குத் தளம் அமைக்க இடமளிக்கப்பட்டுள்ளது. இங்கு சிறியதொரு சிறந்த தளத்தை அமைப்பது கடினமானது. இதன் மூலம் துறைமுகத்துக்குள் கடற்படை நுழைவதை விட அதன் விளிம்பு பகுதியில் செயற்படுகின்ற வாய்ப்பே பெரும்பாலும் கிடைக்கும் என்று கூறியிருக்கின்றார் இந்தியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்.

அதாவது துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டாலும் துறைமுகத்துக்குள் கடற்படை நுழையும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது குறித்து இந்தியாவுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியும் மூலோபாய நிபுணருமான சுதர்சன் ஸ்ரீகாந்த் கொழும்புத் துறைமுகத்தின் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திலுள்ள நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கொழும்புத் துறைமுகம் முழுவதும் இலங்கைக் கடற்படையினர் பரவியிருக்கின்றனர் ஆனாலும் சீனாவினால் கட்டப்பட்ட கொழும்புத் துறைமுகத்தின் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்துக்குள் கடற்படையின் நடமாட்டங்கள் இல்லை.

அதுபோலவே அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் கடற்படைக்கு இடமளிக்கப்படாமல் இருப்பதற்கு வாயப்புகள் இருக்கின்றன என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நகர்வுகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அதேவேளை அம்பாந்தோட்டையில் இலங்கைக் கடற்படையின் நகர்வை இந்தியாவில் எதிர்மறையாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அது மாத்திரமன்றி இலங்கைக் கடற்படைக்கு சூழ்நிலை விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தால் அது இந்தப் பிராந்தியத்தை தொடர்ந்து கண்காணிக்கும் ஆற்றலை அதிகரிக்கும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அம்பாந்தோட்டைக்கு இலங்கைக் கடற்படைத் தளம் மாற்றப்படுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் தளம் அமைப்பதற்கான அடிப்படைச் சூழலும் உட்கட்டமைப்பு வசதியீனங்களும் உடனடியாக இந்த இடமாற்றத்தை சாத்தியப்படுத்துமா என்ற கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது.

அதேவேளை அம்பாந்தோட்டையில் தளம் அமைப்பதன் மூலம் துறைமுகத்தை முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு சீனாவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வாயப்பு உருவாக்கப்படும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு மர்மமாக மற்ற நாடுகள் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையும் தவிர்க்கப்படும்.

இந்தியா இதனை தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அடித்தளமாகப் பார்க்கிறது. அதேவேளை இலங்கையோ மோதல்களைத் தாடுப்பதற்கான உத்தியாக நோக்குகிறது.

எது எவ்வாறாயினும் அம்பாந்தோட்டைக் கடற்படைத் தளம் உடனடிச் சாத்தியாக இருக்காவிடினும் அது அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.