படையினர் உயிர் தியாகம் செய்யவில்லை எனில் போர் முடிந்திருக்காது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

நாட்டின் தேசிய படையினர் தமது உயிரை தியாகம் செய்யவில்லை என்றால், 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் - தம்புலு, ஹல்மில்லேவ இயந்திர காலால் படை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட போர் நினைவு தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக ஏனைய படைப்பிரிவுகளுடன் உரிய புரிந்துணர்வுடன் செயற்படுகிறோம்.

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இராணுவம், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான படையினரின் பெறுமதியான உயிர்கள் நாட்டின் ஒருமைப்பாடு, மக்களின் வாழ்க்கை பாதுகாப்பதற்காக தியாகம் செய்யப்பட்டன.

இராணுவத்தினரும், ஏனைய படையினரும் தமது உயிரை பணயம் வைத்து உயிரை தியாகம் செய்து பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அவர்களால் அனுபவிக்க முடியாது போயுள்ளது.

அந்த படையினர் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை எனில் நாம் தற்போது அனுபவிக்கும் சுதந்திரம் கிடைக்காது போயிருக்கும்.

இன்றைய அமைதியான சூழலை ஏற்படுத்த படையினர் தமது பெறுமதியான உயிர்களை தியாகம் செய்தனர். அவர்கள் இறந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.