கரைச்சி பிரதேசசபையின் ஏழாவது அமர்வின் போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட போத்தல்களில் நீர் நிரப்பப்பட்டு வழங்கப்பட்டமையினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமர்வில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் தங்களது கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர்.
கரைச்சி பிரதேசசபையின் ஏழாவது அமர்வு தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நேற்று காலை ஆரம்பமானது.
இதன்போது சபையில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு பணியாளர்களால் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட வெற்று போத்தல்கள் 35 இற்கும் மேற்பட்டவை கொண்டு வரப்பட்டு அதில் நீர் நிரப்பி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சில சந்தர்ப்பங்களில் போத்தல்களில் நிரப்பிய நீரை அவதானித்த பணியாளர்கள், அதனை வெளியே கொண்டு சென்று ஊற்றிவிட்டு மீண்டும் அந்த போத்தல்களில் நீர் நிரப்பி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் சபையில் உறுப்பினர்களுக்கிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் மருத்துவர் விஜயராஜன்,
“நாங்கள் சுகாதாரத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இங்கு சுகாதாரத்திற்கு முற்றிலும் புறம்பான செயற்பாடு இடம்பெறுகின்றது.
இந்த போத்தல்கள் ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும், அதற்கேற்ற வகையில் தான் அவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அசோக்குமாரும் இது தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் பிற்பகல் சபை அமர்வின் போது புதிதாக போத்தல் நீர் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.