தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவருக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலை

Report Print Shalini in பாதுகாப்பு

இந்தியா - இராமநாதபுரம், சென்னை புழல் சிறையில் இருந்த விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவரை இராமநாதபுரம் 'கியூ' பிரிவு பொலிஸார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

புழல் சிறையில் இருந்த முருகன் உதயகுமார் என்ற குறித்த நபர் தொண்டியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற சம்பவத்தில் 'கியூ' பிரிவு பொலிஸாரால் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை முடிந்து நேற்று இரவு மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல மருத்துவச் சான்றிதழ் பெற அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் ஏற்கனவே அவருக்கு சான்றிதழ் அளித்த டாக்டர் பணியில் இல்லாததால் பொலிஸார் திரும்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இராமநாதபுரம், உச்சிப்புளியில் 2015ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி பொலிஸார் ஒரு காரை சோதனை செய்தனர்.

அதில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் இலங்கையைச் சேர்ந்த முருகன் உதயக்குமார் மற்றும் ஸ்ரீ என்போர் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், கைதான நான்கு பேரும் இராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் தப்பிச்சென்ற முருகன் உதயக்குமார் என்பவரை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து 'கியூ' பிரிவு பொலிஸார் கைது செய்திருந்தது, இவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்காக தொண்டியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற சம்பவம் உள்ளது.

இந்த நிலையில், புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த முருகன் உதயகுமாரை தொண்டியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற வழக்கில் இராமநாதபுரம் 'கியூ' பிரிவு பொலிஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.