இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு விளக்கமறியல்

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கடந்த 16ம் திகதி இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பேருந்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை சரணடைந்த நிலையில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை அக்டோபர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேருந்து நடத்துனரான 28 வயதுடைய எஸ்.தயாபரன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இவரை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அக்டோபர் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தனியார் பேருந்தின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்து மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா, முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி மாவட்ட இ.போ.ச பேருந்துகள் கடந்த 17ம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

வவுனியா மாவட்ட தனியார் பேருந்துகளின் வெளிமாகாண சேவைகள் நேற்று மதியம் முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் இன்றைய தினம் வெளிமாவட்ட தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.