யாழ்ப்பாணம் - ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்த கும்பலை தடுக்கச் சென்ற தாயை கொலை செய்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கோப்பாய் பொலிஸாரின் விசேட அணியினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 வயதுடைய சந்திரராசா விஜயகுமாரி என்ற தாயே உயிரிழந்திருந்தார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டதோடு, தாக்குதலில் உயிரிழந்த தாயின் மகனும் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.