வடக்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Shalini in பாதுகாப்பு

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக இவர்கள் போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் இன்று அதிகாலை விமான நிலைய இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய பொன்னுத்துறை துவாரகன், 22 வயதுடைய அரியரத்னம் விஜய் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 28 வயதுடைய மதியதேவாஸ் நிரோஜன் ஆகிய தமிழர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த இருவர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று கட்டுநாயக்க விமான நிலைய இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.