சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு
54Shares

வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசீன் சிறைச்சாலைகளுக்கான பாதுகாப்பு பணிகளில் இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலைகளுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, வெளியில் இருந்து சிறைச்சாலைக்கு வரும் நபர்களை சோதனையிடுதல் ஆகிய பணிகளில் அதிரடிப்படையினர் ஈடுபடுவார்கள் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பணிகளிலும் அதிரடிப்படையினரை ஈடுபடுத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதல் கட்டமாக அண்மையில் அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு பணிகள் அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கு எதிராக அந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறைச்சாலையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை வழிநடத்தியதாக கூறப்படும் 8 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கைதிகள் நேற்றைய தினம் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளில் ஜூலம்பிட்டியே அமரே, தங்கல்லே மஹேஷ் ஆகியோரும், ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட கைதிகளும் அடங்குகின்றனர்.

இவர்கள் களுத்துறை, காலி, மாத்தறை, குருவிட்ட மற்றும் மொனராகலை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.