நாலக டி சில்வாவினால் சிறைச்சாலையில் அமைதியின்மை

Report Print Shalini in பாதுகாப்பு

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவினால் சிறைச்சாலையில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் நாலக டி சில்வா வெலிக்கடைச் சிறைச்சாலையில் வை.ஓ பிரிவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உரிய நடைமுறைகளுக்கமைய, கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலேயே நாலக சில்வா தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவரது பாதுகாப்புக் கருதியே, வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று (25) இரவு, சிறைச்சாலையில் நாலக சில்வா வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதில், அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கவில்லை என்றுக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், நாலக டி சில்வாவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, வைத்தியர் பரிந்துரை செய்துள்ளார்.

இருப்பினும், அதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், அவ்விடத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.