மட்டக்களப்பு பொலிஸார் சுட்டுக்கொலை! கிளிநொச்சியில் ஒருவர் சரணடைந்துள்ளார்

Report Print Suman Suman in பாதுகாப்பு

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி - வட்டக்கச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் ஆவார்.

இவர் முன்னாள் போராளி என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு குற்றப்புலனாய்வுக் குழு விசாரணைகளை மேற்கொண்டு இருந்தது.

இவர்கள் முன்னெடுத்த விசாரணைகளில் தெரிவந்ததாவது,

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் என்பவற்றை முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்த பணிக்குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதில் குறித்த பணிக்குழுவில் பணியாற்றிய உறுப்பினர்களையும் பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையிலேயே வட்டக்கச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியான இராசநாயகம் சர்வானந்தனை பொலிஸார் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் இன்று காலை கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இவரிடம்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் CID யினரிடம் பொலிஸார்பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது