கொழும்பில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார்? பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

கொழும்பில் பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் சூத்திரதாரி குடு ரொசான் எனும் பாதாள உலகக் குழுத் தலைவரான பிரசாத் ருவான் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு - முகத்துவாரம் - அளுத்மாவத்தை ரோயல் கார்டடின் வீட்டு வளாகத்துக்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 58 வயதான ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணையின் போது சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டக்குளி - சமித்திபுர பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான சூட்டி உக்குவா என்பவரின் மனைவியும், மைத்துனரும் இந்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுள் இருந்துள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் வீடு திரும்பும் போதே அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு ரீ56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலும் பகையை அடிப்படையாக வைத்து இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி இரவு மட்டக்குளி - சமித்திபுர பகுதியில் குடு ரொசான் உள்ளிட்டவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சூட்டு உக்குவா என்பவரும், அவரது நெருங்கிய நண்பர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.

இதற்கு முன்னர் சூட்டி உக்குவா, குடு ரொசானின் தந்தையை கொலை செய்துள்ளதுடன், அதற்கு பழிவாங்கும் நோக்கில் குடு ரொசான், சூட்டி உக்குவாவின் தாயை கொலை செய்துள்ளார்.

அதன் பின்னரே குடு ரொசான் சூட்டு உக்குவாவை சுட்டுக் கொலை செய்தார் என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் தற்போது குடு ரொசான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பகை காரணமாக இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளன என்ற கோணத்திலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் தீவிரமாக நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers