வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டமா?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

முன்னாள் புலிப் போராளியொருவர் வடக்கில் பாரிய அனர்த்தங்களை மேற்கொள்ள முயற்சித்தார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடனான பொதியொன்றை கைவிட்டு தப்பிச் சென்ற முன்னாள் போராளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வடக்கில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு குறித்த நபர் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிங்கள தமிழ் மாணவர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தச் செய்தல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் இராணுவத்தையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போராளி கடந்த 2012ம் ஆண்டு காவல்துறை கைதிலிருந்து தப்பித்து இந்தியாவிற்கு சென்று ஆறு ஆண்டுகளின் பின்னா சில மாதங்களுக்கு முன்னதாக நாடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பியவர், இறுதிப் போரில் உயிரிழந்த போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களை தந்திரமாக தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் பெயர்களில் சிம் அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்க விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்த திட்டத்திற்கு வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதா என்பது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டதாகவும் மீளவும் தலைதூக்கக் கூடிய சாத்தியமில்லை எனவும் தெற்கு அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் சூளுரைத்து வருகின்றமை கவனிக்கத்தக்கது.