இலங்கை கடற்படையினரின் கடுமையான எச்சரிக்கை! மீறினால் சட்ட நடவடிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

அண்மையில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இதேவேளை சில மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக பேசிய அவர்,

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளின் காரணமாக வடபகுதி மீனவர்களின் வலைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். கடந்த 12 ஆம் 13 ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் 500 இற்கும் அதிகமான இந்திய படகுகள் அத்துமீறி நுழைந்தமை இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு படகுகளில் இருந்த 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனவே இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers