தமிழக மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படையினருக்கு அதிர்ச்சி! யுத்த காலத்திலும் இப்படி நடக்கவில்லையாம்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சேதமாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப் படகுகள் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இதன்போது, கடற்படையின் ஷங்காய் வகையைச் சேர்ந்த ரணஜய என்ற அதிவேக பீரங்கிப் படகு, தமிழக மீன்பிடிப் படகுகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மீனவர்களை தாம் விரட்டும் போது, மீனவர்களின் படகு ஒன்று கடற்படையினரின் அதிவேகப் பீரங்கிப் படகின் மீது வேண்டுமென்றே மோதியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இம் மோதலினால் பீரங்கிப் படகிற்கு சேதம் ஏற்பட்டதுடன், மோதிய மீன்பிடிப் படகும் சேதமடைந்து கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளனர்.

கடற்படை கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்களின்படி, சேதமாகியுள்ள கப்பலானது, உருக்கினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறைவான சேதமே ஏற்பட்டது என்றும், அலுமினிய அடித்தளத்தைக் கொண்ட அதிவேகத் தாக்குதல் படகு மீது மோதியிருந்தால் பாரதூரமான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு கடல்பகுதியில் கடற்படைப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு மோதிய சம்பவம் தொடர்பாக, விரிவான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், இது தொடர்பான காணொளிப் பதிவுகள் ஆராயப்படுவதாகவும் கடற்படை தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்படுவதை தவிர்க்க, மோதலில் ஈடுபட முனையும் தமிழக மீனவர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மற்றொருபுறத்தில், காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அப்பால், இயந்திர அறையில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் இருந்த 5 தமிழக மீனவர்களையும், தாங்கள் கைது செய்ததாகவும், அந்தப் படகு மூழ்கி விட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படைப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு மோதிய சம்பவம் வடக்கு கடற்பகுதியில் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீன்பிடிப் படகு வேண்டுமென்றே கடற்படைப் படகை மோதி சேதப்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ள இலங்கை கடற்படையினர், போர் நடந்த காலங்களில் கூட இதுபோன்று தமிழக மீன்பிடிப் படகு எதுவும் மோதியதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தமிழக மீனவர்களை விரட்டிய போது தத்தளித்தவர்களை தாங்கள் காப்பாற்றியதாகவும், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், விரைவில் இது தொடர்பான அறிக்கை கிடைக்கும் என்றும் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.