ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்க சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு கொமாண்டோக்கள் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் நேற்று முன்தினம் இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக விசேட அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பதுகாப்பு பிரிவினர் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீதியின் குறுக்காக மாடு ஒன்று ஓடியதாகவும், அதனை காப்பாற்ற முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் மரத்தின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் இராணுவத்தினரின் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், இராணுவத்தினர் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.