கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம்! 443 பயணிகளின் நிலை என்ன?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த நோயாளி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய பிரிவிடம் ஒப்படைத்த பின்னர், அவர் நோயாளர் காவு வண்டி ஊடாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

29 வயதான ருமேனியா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நோய் வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தரையிறக்கப்பட்ட விமானம் 97,74,000 ரூபாய் பெறுமதியான விமான எரிபொருள் மீள்நிரப்பிச் சென்றுள்ளது.

எனினும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய விமானம் தனது பயணித்தை இரத்து செய்துள்ள நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த விமானத்தில் 443 விமான பயணிகள் மற்றும் 21 ஊழியர்கள் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.