இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில்..! விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டிய பாகிஸ்தான் பிரதமர்!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் புல்வாமா தாக்குதலின் போது 44 இந்திய இராணுவ வீரர்கள் பலியானார்கள். இதனையடுத்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோஷங்கள் எழுப்பட்டன.

இந்நிலையில், இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முகாம்களை தாக்கிய அழித்ததாகவும், அதன் போது ஏராளமான போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தாலும் பாகிஸ்தான் அதனை மறுத்திருந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும், பின்னர், இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கியிருப்பதும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர் நாளைய தினம் விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தத் தாக்குதல் தொடர்பிலும், ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பிலும் பேசியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,

"தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள்.

ஆனால் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்." என்று குறிப்பிட்டுப் பேசினார்.

இதேவேளை கைது செய்யப்பட்டு இருக்கும் இந்திய வீரர் நாளை விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய வீரர் விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தமையடுத்து அவருக்கான பாராட்டுக்களும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.