22 சீட்டுக்காக அணு ஆயுத போரா..? பாஜக மீது இம்ரான்கான் கட்சி குற்றச்சாட்டு

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in பாதுகாப்பு

வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தியா இதற்காக இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து இம்ரான் கானின் பிடிஐ கட்சி பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அணுசக்தி ஆயுதங்களைக் கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையே உச்சபட்ச பதற்ற நிலையை உருவாக்கியதின் பின்னணியில் அரசியல் விளையாட்டு இருக்கிறது. இது வெளியே உள்ளவர்களுக்கு தெரிய இரண்டு நாட்கள் ஆகியிருக்கிறது.

இதற்கான காரணம் வெறும் 22 நாடாளுமன்ற சீட்டுகள் மட்டுமே. இந்தக் காலகட்டத்தில், எந்தத் திட்டமும் ரகசியமாகவே வைக்க முடியாது. இந்தியர்களே குறித்துக்கொள்ளுங்கள்; போருக்கு நோ சொல்லுங்கள்'' என்று தெரிவித்துள்ளது.

இன்று காலை கர்னாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, "இந்த விவகாரத்தால் பாஜக செல்வாக்கு உயர்ந்துள்ளது, கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளில் 22 மக்களவை தொகுதிகளை இந்த விவகாரம் மூலமாகவே பெறுவோம்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து இம்ரான் கானின் பிடிஐ கட்சி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் எடியூரப்பா பேசிய வீடீயோவையும் வெளியிட்டு தனது கருத்தை பதிந்துள்ளது.