பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு 70 இலட்சத்தை திருடிய திருடர்கள்! பொலிஸார் வலைவீச்சு

Report Print Mubarak in பாதுகாப்பு

அனுராதபுரம் மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையின் கணக்காளரது அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அங்கிருந்து 70 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு(4) இடம்பெற்றுள்ளதென விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அலுவலக அறையிலிருந்து ஆவணங்கள் சிலவற்றையும் எரித்து நாசப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையின் சுத்திகரிப்பு ஊழியர்கள் சம்பவம் நடைபெற்ற தினம் வழமைபோன்று அலுவலக அறையினைதுப்பரவு செய்வதற்காக சென்றிருந்த போது அலுவலக அறைக்குள் புகைவெளி வருவதை கண்டுள்ளனர்.

உடனே அது குறித்து வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அனுராதபுரம் தலைமையக பொலிஸார் குறித்த அறையினை சோதனைக்குட்படுத்திய போது அங்கிருந்து பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகம் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி திலின ஹேவாபத்திரனவின் ஆலோசனைப்படி அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.