பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் கைது?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரை கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் திணைக்களத்தில் பதவி வகித்த மற்றும் வகிக்கும் இரண்டு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி - ரத்கம பிரதேசத்தில் இரண்டு வர்த்தகர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேவர்தன கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் தாக்குதலில் ஒரு வர்த்தகர் கொல்லப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதன்போது மற்றைய வர்த்தகரையும் கொன்று எரித்துவிடுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேவர்தன பணிப்புரை விடுத்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வர்த்தகர்கள் படுகொலை குறித்த விசாரணைகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி இடையூறு ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார சில விசாரணைகளை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பொலிஸ் உயர் அதிகாரிகளும் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.