வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது! சுதந்திர ஊடக இயக்கம் எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டம் (PTA) மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) நாட்டின் ஜனநாயகத்துக்கும் வெளியீட்டு சுதந்திரத்திற்கும் பாரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என சுதந்திர ஊடக இயக்கம் எச்சரித்துள்ளது.

புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற ஒன்றை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் சூழ்நிலையில் அது தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டம் (PTA) மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) நாட்டின் ஜனநாயகத்துக்கும் வெளியீட்டு சுதந்திரத்திற்கும் பாரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியன இணைந்து கூறியுள்ள அதேவேளை, இந்த ஜனநாயக விரோத செயலில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அரசை கேட்டுக்கொள்கின்றன.

நடப்பு அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிக்க ஒப்புக் கொண்ட போதிலும், இன்றளவிலும் அது நடைமுறையில் உள்ளது. தற்போது கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Counter Terrorism Act - CTA), உரிய தரப்பினர் எவரினதும் ஆலோசனை பெறப்படாமல், இரகசியமான முறையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் 'பயங்கரவாத குற்றச்செயல்' என்பது பரந்த அர்த்தத்தை கொண்டுள்ளது என்பதால், அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மரபுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப நடந்துகொள்ளும் இலங்கையின் கடப்பாடு முறிக்கப்படும் அபாயம் உள்ளது.

கொண்டுவரப்படவுள்ள இந்த சட்டம் ஊடகவியலாளர்களை, பொதுமக்களுக்காக பிரசுரித்து வெளியிடும் எந்தவொரு தகவலுக்காகவும் கைது செய்யவோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கவோ அனுமதிக்கிறது. பதிவு செய்யப்பட்ட ஊடகம் என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியின் ஊடாக சமூக மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவோர் பெரும் ஆபத்தில் உள்ளனர். அவ்வாறானோரை கைது செய்யவோ அல்லது பலவந்தமாக பதிவு செய்யவோ நிர்பந்திக்க முடியும்.

இலங்கையில் பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பான 20 சட்ட விதிகள் இப்போதே உள்ளன என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு மேலதிகமாக அவசரகாலச் சட்டங்களை பிரகடனப்படுத்தும் விசேட அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில், பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்கவும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை (CTA) வாபஸ் பெறவும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றுடன் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் சக்திகள் இணைந்து அரசிடம் கோரிக்கை விடுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.