பொலிஸ் நிலைய களஞ்சியசாலையிலிருந்து கைத்துப்பாக்கிகள் மாயம்

Report Print Thirumal Thirumal in பாதுகாப்பு

நுவரெலியா பொலிஸ் வலயத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையானது குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இருந்த 2 கைத்துப்பாக்கிகளே காணாமல்போயுள்ளதாகவும், கடந்த 23ஆம் திகதி அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கபட்டதாகவும், கைத்துப்பக்கிகளை பொலிஸ் உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

காணாமல்போன கைத்துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, எம்.34 என்ற வகையினை கொண்ட கைத்துப்பாக்கிகளே காணாமல்போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.