வடக்கில் இருந்து முழுமையாக படையினரை வெளியேற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒரு விடயம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றுவது குறித்து அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து அந்த ஊடகம் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“படையினர் மற்றும் பொலிஸாரை ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கூறவோ, பணிக்கவோ முடியாது.
தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் காரணங்களால் இவ்வாறு செய்ய முடியாது. இந்த விடயம் குறித்து பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்து கலந்துரையாடி, அரசாங்கம் பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
படையினரால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் உணருவார்களேயானால், அரசாங்கம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முடிவுக்கு வரும்.
அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே, இந்த பிரச்சினைக்கு ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.