கிளிநொச்சியில் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் விசேட கூட்டம்

Report Print Yathu in பாதுகாப்பு

எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி,

அச்சப்பட வேண்டியதில்லை. அவதானமாக இருந்தால் போதும். பாடசாலைகள் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பாடசாலைகளில் சோதனைகளை முன்னெடுக்கவுள்ளோம். ஏனைய பாடசாலைகளிலும் இவ்வாறு செய்வோம்.

தொடர்ந்தும் குண்டு செயலிழக்கும் பிரிவினரையும் அழைத்து விசேட சோதனைகளை முன்னெடுப்போம். அதன் பின்னர் படையினர் பாடசாலைகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

மாணவர்களின் புத்தகப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்வதற்கு பெற்றோர் உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை புத்தகப் பைகளை கொண்டு வர வேண்டாம் என கூற முடியாது. அவர்கள் அதிகம் புத்தகங்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், இது ஓர் சாதாரண விடயம். இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை. மாணவர்கள் புத்தகப் பைகளாக உரு தெரியக் கூடிய பைகளை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,

கிளிநாச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சில பாதுகாப்பு செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தோம்.

இந்த கலந்துரையாடலில் அதிபர்களிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஊடகங்களின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விசேட கூட்டத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி சார்பில் 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர், அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.