கோத்தபாயவிற்கும் தொடர்பு இல்லை! சரத் பொன்சேகா மறுப்பு

Report Print Murali Murali in பாதுகாப்பு

தேசிய தௌஹீத் ஜமா அமைப்பிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருக்கின்றது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் பலிக்கடாக்களாக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அஸ்கிரிய, மல்வத்த பீடங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த பொன்சேகா, இறைவழிபாட்டின் பின்னர் – மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பொன்சேகா,

“நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலானது நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டதாகவே இருக்கவேண்டும். அடிப்படைவாத அமைப்புடன் கோத்தபாயவுக்கு தொடர்பிருக்கும் என நான் நம்பவில்லை.

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இருக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இது விடயத்தில் பலிக்கடாக்களாக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமா அமைப்பிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருக்கின்றது என ராஜித சேனாரட்ன முன்வைத்த குற்றச்சாட்டையும் பொன்சேகா நிராகரித்தார்.