பயங்கரவாத விசாரணைகளுக்கு தடையேற்படுத்தும் முன்னாள் புலனாய்வு அதிகாரி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைகளுக்கு தடையேற்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரி சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரி சொந்தமான செம்பு தொழிற்சாலையை வெல்லம்பிட்டிய பொலிஸார் முற்றுகையிட்ட போது, வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்ட இந்த ஓய்வுபெற்ற அதிகாரி, “ எதற்கு அந்த தொழிற்சாலையை முற்றுகையிட சென்றீர்கள்?. அங்கு எதுவும் இருந்தா, அங்கு ஒன்றும் இருக்கவில்லையே” எனக் கூறி தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு, விசாரணை அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் தடையேற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரி, இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தலையீடுகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ஹாஜியாருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த ஓய்வுபெற்ற அதிகாரி ஈஸ்டர் குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் சஹ்ரான் ஹசிமின் உறவினரான காத்தான்குடியை சேர்ந்த ஹாசிம் என்பவருடனும் நெருக்கமாக பழகியவர் என கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.