குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள முக்கிய தேவை: ஐக்கிய அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த ஹக்கீம்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு
108Shares

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து அண்மைய தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின்

தற்போதைய நிலைமை குறித்தும், இதர முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஜொஅன்னா எச். பிரிட்செட்டும் சமூகமளித்திருந்தார்.

குண்டு வெடிப்புச் சம்பவங்களின் உண்மையான சூத்திரதாரிகளை சரிவர கண்டறிவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்றும் இதற்கு முன்னர் நடந்த கிளர்ச்சிகளின் போதும், யுத்தத்தின்போதும் நடந்த சம்பவங்களை விட அண்மைய தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டோர் செயற்பட்ட விதம் வித்தியாசமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உயர் கல்விக்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சமீபத்திய நிகழ்வுகளை தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பல்கலைக்கழக மாணவிகளையும் பாதித்து இருக்கின்றதா என தூதுவர் வினவிய போது, பெண்களின் உடை பற்றிய இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

மத்ரஸா கல்வி திட்டத்தில் சமய கல்வியோடு உலக கல்வியும் இணைந்ததாக போதிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை விளக்கிய அமைச்சர், உயர் கல்வித்துறையில் போன்று சமயக் கல்வி கூடங்களிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியவாறாக பாடத்திட்டங்கள் அமைவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக கூறினார்.

பல்கலைக்கழகங்களில் தரநிர்ணயம் குறித்தும் முன்னேற்றகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளாார்.