சவூதியில் சிக்கிய பிரதான சூத்திரதாரி! சஹ்ரான் கோஷ்டியினருக்கு பயிற்சி வழங்கியதாக தகவல்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

சவூதி பொலிஸால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென அடையாளம் காணப்பட்டுள்ள மொஹமட் மில்ஹானை இன்னும் சில நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உயர்மட்ட அதிகாரியொருவரை சுட்டிக்காட்டி அரச பத்திரிகையொன்று இன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென இலங்கை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மொஹமட் மில்ஹான் சவூதியில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் மில்ஹான் எனும் சந்தேகநபர் அபுசீலன் எனும் ஐ.எஸ்.ஐ.எஸ் பெயருடன் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சந்கேதநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிஐடி குழுவொன்று கடந்த ஏழாம் திகதி சவூதி நோக்கி சென்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு முன் மக்காவுக்கு தொழுகைக்காக சென்றிருந்த இந்த சந்தேகநபர் கடந்த முப்பதாம் திகதியே நாடு திரும்புவதாக இருந்தது.

அத்துடன் அன்று அவர் நாடு திரும்புவதற்கு இருந்த விமானப் பயணிகளின் பெயர் பட்டியலிலும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர் நாட்டுக்கு வராதது தெரியவந்தது.

அதனையடுத்து உஷாரடைந்த சிஐடி அதிகாரிகள் சர்வதேச பொலிஸார் மற்றும் சர்வதேச புலனாய்வுப் பிரிவினருக்கூடாக இந்த நபர் பற்றிய தகவல்களை சவூதி பாதுகாப்பு பிரிவுக்கு பெற்றுக் கொடுத்தனர்.

இந்த தகவலையடுத்து தேடுதல் நடத்திய சவூதி பொலிஸார் அந்த நாட்டின் விமான நிலையத்திலுள்ள கழிவறைக்குள் ஒளிந்திருந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

இதேவேளை சந்தேகநபர் எடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்களை சுட்டும், வெட்டியும் கொலை செய்த பின் அவர்களிடமிருந்த ரிவோல்வர்களை பறித்து எடுத்திருந்தமை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொலைகளுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலும் மூவரை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அத்துடன் சஹ்ரான் கோஷ்டியினருக்கு இவரே துப்பாக்கிச்சுடும் பயிற்சியை அளித்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், அமைச்சர் கபீர் ஹாசிமின் இணைப்புச் செயலாளரை கடந்த மார்ச் மாதத்தில் மாவனெல்லையிலுள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முற்பட்டவரும் இதே சந்தேகநபரென பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

இதற்காக அவர் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை பொலிஸார் நேற்று முன்தினம் பாணந்துறையில் வைத்து கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.