வவுனியா தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் தீ பரவல்: விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படை

Report Print Thileepan Thileepan in பாதுகாப்பு

வவுனியா, தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு தீ செல்ல விடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர்.

இன்று மாலை வவுனியா, குடாகச்சகொடி, தோணிகல பாறைக் கல்வெட்டு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது. இத் தீயானது அருகில் இருந்த மக்கள் குடிமனைக்குள் பரவிய நிலையில், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா தீயணைப்பு பிரிவினர் மக்கள் குடிமனைக்குள் அதீயானது பரவலடையாது தடுத்ததுடன், காட்டுக்குள் ஏற்பட்ட தீ பரம்பலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். எனினும் இத் தீ விபத்து காரணமாக சுமார் 5 ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சிறிது நேரம் நின்று விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். மேலதிக தண்ணீர் வசதியை தண்ணீர் தாங்கி மூலம் ஏற்படுத்தி தருமாறு தீயணைப்பு பிரிவினர் கோரிய போதும் அவர்கள் அது தொடர்பில் கண்டு கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.