கொழும்புத் தாக்குதலில் கொல்லப்பட்ட சீனர்கள் யார்? ஏன் இலங்கை வந்தார்கள்? வெளியானது தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட சீனாவைச் சேர்ந்த நான்கு விஞ்ஞானிகளின் பெயர் விபரங்களை சீனது் தூதரகம் வெளியிட்டுள்ளதாக Nature பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்களில் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கை வந்தவர்களும் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டின் சுற்றுலாத்துறையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கிங்ஸ்பெரி ஹொட்டலில் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கியிருந்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் வானிலை ஆய்வு தொடர்பான கூட்டு திட்டத்தில் பங்கேற்கவே அவர்கள் இலங்கை வந்திருந்தனர் என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு சீனாவில் உள்ள Sea Institute of Oceanology-ஐ சேர்ந்த லி ஜியன், பன் வின்லியங் மற்றும் துணை ஆராய்ச்சியாளர் லீ தவி, முனைவர் மாணவர் வங் லிவி ஆகியோர் தான் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர் என சீனத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் தவிர, சீனாவை சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்களும் இதன்போது காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்போம் என்பதை உறுதியளிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் சுற்றுலாத்துறையும் முதலீட்டுத் துறையும் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் வருகை பெருமளவில் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விரைவில் நிலைமை சீரமைக்கப்பட்டு நாடு பழைய நிலையை அடையும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.