இலங்கையிலுள்ள தற்கொலைதாரிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்யும் வழிமுறை கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எவ்வாறு மூளைச் சலவை செய்கிறது என்பது தொடர்பில் புலனாய்வு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மிகவும் நுட்பமான முறையில் தனித்தனியான குடும்பங்களை தெரிவு செய்து இவ்வாறான மூளைச்சலவை செய்ததாக பிபிசி உலக சேவைக்கு அவர் விளக்கம் அளித்தள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குடும்ப வலையமைப்பு ஒன்றின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பங்களும் தனியான அலகுகளாக செயற்பட்டதாக இலங்கை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குடும்ப வலையமைப்பாக செயற்பட்டதன் மூலமே பயங்கரவாத குழு தமது நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொண்டு இரகசியமாக செயற்பட்டதாக அவர் கூறினார்.

தனி தனி குடும்பங்கள் தீவிரமயமாக்கப்பட்டு அவை பின்னர் ஏனைய தீவிரமயமாக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பரந்த வலையமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றங்களுக்கும் திட்டமிடல்களுக்கும் சமூக வலைத்தளங்களும் ஏனைய தொடர்பாடல் வசதிகளும் பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறு இந்த வலையமைப்பு தொடர்பாடலை மேற்கொண்டது என்பது பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.

பயங்கரவாத குழுக்கள் தமது நடவடிக்கைகளுக்கு குடும்பங்களை பயன்படுத்தி கொள்வது புதிய வழிமுறையாக அமைந்துள்ளது.

இந்தோனேசியாவில் தேவாலயங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் இந்த புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.