வவுனியாவில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Report Print Thileepan Thileepan in பாதுகாப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கும், மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கும் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் வவுனியா நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பகுதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதி மற்றும் வைத்தியசாலையினை சூழவுள்ள வீதி அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு வழமையை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் புதிதாக ஓர் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வவுனியா நகரினுள் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், வவுனியா மின்சாரசபை வீதி, பூங்கா வீதி, உள்வட்ட வீதி, சிந்தாமணிபிள்ளையார் ஆலய வீதி, சிங்கள பிரதேச செயலக வீதி போன்ற இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தினுள் செல்லும் அனைத்து பயணிகளினதும் பொதிகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே பேருந்து நிலையத்தினுள் அவர்கள் செல்ல அனுமதி வழங்குகின்றனர்.

வவுனியா நகரினுள் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும், தேவை நிமித்தம் வவுனியா நகரினுள் செல்லும் சமயத்தில் அடையாள அட்டையை எடுத்து செல்லுமாறும் பொதுமக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக வவுனியா வைத்தியசாலைக்கு கிடைக்க பெற்ற கடித்தினையடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.