இலங்கை தாக்குதல்களுக்கு இந்தியாவிலிருந்து திட்டம் வகுக்கப்பட்டது! இராணுவத் தளபதி

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நான் உட்பட பாதுகாப்புப்படை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாகுதல்களின் குற்றவாளிகள் தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து அவரிடம் தகவல் பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துரைத்த அவர்,

கடந்த 21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில் எட்டுப்பேர் தம்மை தற்கொலை தாரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தகவல் கிடைத்தது. ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பா என்பதில் எமக்கு கேள்வி இருந்தது. சில இறுக்கமான கொள்கைகளுடன் அவர்கள் செயற்படுவது மட்டுமே அறிவிக்கப்பட்டது.

அதேபோல் பாதுகாப்பு சபையில் இந்த விடயம் குறித்து 13 தடவைகள் பேசப்பட்டதா என்று எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்.

ஆனால் ஆழமாக எந்த விடயங்களும் பேசப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட சகல தரப்பினரதும் பலவீனம் தான் காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் யார் குற்றவாளி என்பதை என்னால் கூற முடியாது. நான் உட்பட பாதுகாப்புப்படை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் இதில் குற்றவாளிகள் தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன்.

21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றும் எமக்கு 24 ஆம் திகதி தான் இவற்றை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. எமது புலனாய்வு தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது. சிறந்த சில புலனாய்வு அதிகரிகள் கைதுசெய்யப்பட்டமை புலனாய்வு செயற்பாடுகள் குறைக்கப்பட்டமை என்பன சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது.

அதேபோல் இராணுவமாக எம்மால் சுயாதீனமாக செயற்பட அதிகாரம் இல்லாமையே இதற்கு காரணம். எனினும் 24 ஆம் திகதியில் இருந்து இருவரை இராணுவத்தின் செயற்பாட்டால் தான் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்துள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு சிறப்பு நேர்காணல் வழங்கியிருந்த இராணுவத்தளபதி, இலங்கையில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள், இந்தியாவின் பெங்களூர், காஷ்மீர்,கேரளா போன்ற பிரதேசங்களில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அப்போது வேறு பயங்கuவாத அணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இராணுவத்தளபதியின் இக் கருத்துக்களை அடுத்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers