சற்று முன்னர் பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Murali Murali in பாதுகாப்பு

குளியாப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் சிலர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த சம்பவம் இன்று தொடர்ந்துள்ளது.

இதன் காரணமாகவே, பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டீ .விக்ரம ரட்ண தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கலகம் ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தமக்கு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கட்டுப்படுத்துவது ஒரு சிறிய விடயமே.

கலகம் ஏற்படுத்துவோருக்கு எதிராக பிணையில் வரமுடியாத அளவிற்கு சட்டத்தை பிரயோகிக்க முடியும். 10 வருடங்கள் சிறையில் அடைக்க கூடிய அளவிற்கு தண்டணை வழங்க முடியும்.

இந்நிலையில், நாட்டில் அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.