தென்னிலங்கை வன்முறையில் வர்த்தகரின் உயிர் பறிபோனது! நாட்டில் நீடிக்கும் அசாதாரண சூழ்நிலை

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனினும், குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, மடிகே, அனுக்கான, கொட்டாம்பிட்டிய, ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளில் பல வர்த்தக நிலையங்கள் வன்முறையாளர்களினால் இன்று அடித்து நொறுக்கப்பட்டன.

சில வர்த்தக நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதேவேளை, வீடுகள், வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறையின்போது படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறையாளர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் வாள்களினால் அவரை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்றும் இந்த வன்முறையின்போது ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு என்றும் பொலிஸார் குறிப்பிட்டதாக அவ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்புக்களும் போடப்பட்டுள்ளன.