இலங்கை எதிர் கொள்ளும் பயங்கரவாதச் சிக்கல்கள்! பெரும் தொகை நிதியை வழங்க சீனா வாக்குறுதி

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சீனா தன்னுடைய முழுமையான பங்களிப்பினை வழங்கும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போ, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய சீன ஜனாதிபதி,

உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும். அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.

இச்சந்திப்பில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை ஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை..

ஜனாதிபதியின் இக்கருத்தினையடுத்து, அந்த உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழில்நுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாார்.

இச்சந்திப்பின் போது, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.

இருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை வலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்பிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers