இலங்கையில் உருவாகியுள்ள பயங்கரவாதத்தை இலகுவாக அழிக்க முடியாது: அநுர பிரியதர்ஷன யாப்பா

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

எமது நாட்டில் உருவாகியிருக்கும் பயங்கரவாதத்தை இலகுவாக அழித்துவிட முடியாது என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், எமது நாட்டில் உருவாகியிருக்கும் பயங்கரவாதத்தை இலகுவாக அழித்துவிட முடியாது என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது. ஒரு சிலர் தற்கொலைத் தாக்குதலில் இறந்தாலும், இதற்கு உதவிய பலர் தற்போது கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கோத்தபாய ராஜபக்ச காலத்தில் புலனாய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அவ்வாறு இல்லை. புலனாய்வுப் பிரிவினரை பலப்படுத்தாமல் இந்த பயங்கரவாதத்தை ஒருபோதும் அழித்துவிட முடியாது. கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

இதன்மூலம் அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுகிறது. இந்த பயங்கரவாதம் சர்வதேச பயங்கரவாதம் என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், இதற்கு சர்வதேசத்தின் ஆதரவு இருந்தாலும் இலங்கையில் வளர்ச்சியடைந்த பயங்கரவாதமாகும்.

குழப்பங்களை ஏற்படுத்துவதால் மட்டும் இதனை நிறுத்திவிட முடியாது. எனவே, அனைவரும் அமைதியாகவும் ஐக்கியமாகவும் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

இதனை அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். விசேடமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். தமது சமூகத்திற்கு இவர்கள் சரியான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையாலேயே நாட்டுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.