பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்!

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

அண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளை முற்று முழுதாக சீர்குலைப்பதும் இந்த வன்முறைகளின் மற்றுமொரு உள்நோக்கமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வன்முறைகள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் விசேட அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்ததன் பின்னர் இந்த வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கான காரணம் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுளை சீர்குலைப்பதற்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதல்களை வழிநடத்தியதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் ஊரான ஹெட்டிபொல பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கை குறித்து பிரதமர் நேற்றைய தினமே சிரேஸ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.