சதொச கட்டடத்தில் மர்ம அறை! அம்பலப்படுத்தும் ஊழியர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமைச்சிற்கு சொந்தமான சதொச கட்டடத்தில் மர்ம அறை உள்ளதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் (Nethnews.lk) ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு வோக்ஷ்வோல் வீதியில் அமைந்துள்ள பிரதான சதொச கட்டடத்திலேயே இந்த மர்ம அறை உள்ளதாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய பாதுகாப்பிற்கான சதொச ஊழியர் குழுவின் தலைவர் சந்தன புஷ்பமால் கருத்து வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பிற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிமிடோ என்ற அமைப்புக்கு எவ்வித அனுமதியின்றியும், ஒப்பந்தம் இன்றியுமே இந்த அறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த அறையின் கதவு மூடியே இருக்கும். அங்கு செல்பவர்கள் வெளியே இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த வேண்டும். அல்லது கதவை தட்ட வேண்டும்.

அப்படி அழைப்பை ஏற்படுத்தினால் நபர் ஒருவர் வந்து உள்ளே அழைத்து செல்வார். அழைத்து சென்றவுடன் கதவு மீண்டும் மூடப்படும்.

கடந்த நாட்களில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன் போது அங்கு அமைச்சரின் ஊடக பிரிவு என ஒரு பிரிவு உள்ளது. அதில் வெளி பக்கமாக கதவு மூடப்பட்டுள்ள அறைக்குள் ஆண் ஒருவர் இருந்தார்.

வெளியே பூட்டு போட்ட பின்னர் அவர் உள்ளே எப்படி சென்றார். பொலிஸார் மற்றும் நாங்கள் அந்த நபரிடம் பேசிய போது அவர் எதுவும் கூற வில்லை.

இரவு ஊழியர்கள் தன்னை தவறுதலாக அறைக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு நடப்பவை குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தான் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சில அடிப்படைவாத அமைப்புகளுடன் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு தொடர்பு இருப்பதாக அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ரிசாத்தின் பொறுப்பின் கீழுள்ள சதொச நிலையத்தில் மர்ம அறை இருப்பது தொடர்பான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.