சஹ்ரான் ஹசிம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் விசாரணை

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அடுத்த வாரம் அழைக்கப்பட உள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமையவே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்று புதன் கிழமை தனது சாட்சிய விசாரணைகளை ஆரம்பித்தது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் தற்கொலை குண்டுதாரியுமான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமை கைது செய்ய 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய நாலக டி சில்வா பெற்றுக்கொண்ட பிடியாணை மற்றும் அதன் பின்னர் அவர் கையாண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சஹ்ரான் ஹசிம் தொடர்பாகவும் அவரது செயற்பாடுகள் சம்பந்தமாகவும் நாலக டி சில்வா தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அந்த விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்தாகவும் தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் நேற்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.