கொழும்பில் ஆபத்தான நவீன ரக வாகனம் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு! நாசகார வேலைக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை பகுதியிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியிலான இலக்க தகடு அற்ற அதி நவீன ஜீப் வண்டி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு நிறத்திலான ஜீப் வண்டி ஒன்று பல நாட்களாக வீட்டிற்கு அருகில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதில் இலக்க தகடுகள் இல்லை எனவும் பாணந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளார்.

குறித்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை தேடி செல்லும் போதும் குறித்த் வீடு முழுமையாக மதில்களினால் மறைத்து காணப்பட்டுள்ளதுடன், பெரிய கேட் மூடப்பட்டு காணப்பட்டுள்ளது.

அயலவர்களிடம் கேட்ட போது, வீட்டின் உரிமையாளர் இரவில் மாத்திரமே வீட்டிற்கு வருவதாகவும், மதில் மீது ஏறி குதித்தே வீட்டிற்கு செல்வதாகவும், வீட்டில் இருந்து வெளியேறும் போதும் மதில்களில் இருந்து குதித்தே வெளியேறுவுதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் தொலைபேசிக்கு பொலிஸார் அழைத்த போது, உடனடியாக வருவதாக கூறிய போதிலும், நாள் முழுவதும் பொலிஸாரை ஏமாற்றியுள்ளார்.

குறித்த நவீன ஜீப்பின் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் உரிமையாளர் வருகைதராமையினால் கண்ணாடியை உடைத்து பொலிஸார் ஜீப் வண்டியை வெளியே எடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவங்களுக்கு இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.