ஹிஸ்புல்லாஹ்வின் சர்ச்சைக்குரிய காணொளி விவகாரம்! விசாரணையை ஆரம்பித்தது பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பாசிக்குடாவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் அரேபியர்களை சந்தித்துக் கொண்டதாக வெளியான காணொளியை அடுத்து அது தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் உயிர்த்த ஞாாயிறுத் தாக்குதலையடுத்து மறுநாள் இரவு அதாவது 22ஆம் திகதி ஏப்ரல் மாதம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அப்போது ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா பாசிக்குடா ஹோட்டலுக்குச் சென்று அங்கு தங்கியிருந்த அரேபியர்களைச் சந்தித்துப் பேசியதாக காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது, இன்றைய தினம் ஐவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டலில் தங்கியிருந்த அரேபிய பிரஜைகளை சந்தித்த மற்றும் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்படும் 5 பேரிடமே முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவர்கள் கல்முனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய காணொளி வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணையினை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் கீழ், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers