மைத்திரியின் கிடுக்குபிடியினால் திணறும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழுத்தம் காரணமாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடும் நெருக்கடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

எனினும் தெரிவு குழு முன்னிலையில் அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சாட்சியம் அளிக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமை குறித்து சபாநாயகருக்கும், தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் நாளையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சட்ட மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ் உள்ளிட்டவர்களிடம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்களைப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் அரச புலனாய்வு சேவையின் தலைவரான நிலந்த ஜயவீரவையும் சாட்சியமளிக்க தெரிவுக்குழு அழைக்க எதிர்பார்த்துள்ளது. ஆனால், ஜனாதிபதியின் உத்தரவை மீறி அவர் சாட்சியமளிக்க முன்வருவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு அரச அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு உள்ளது.

தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க மறுக்கும் எந்த அதிகாரிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.