இந்தியாவில் பெருமளவு இலங்கை இராணுவத்தினர்

Report Print Malar in பாதுகாப்பு

இலங்கை இராணுவத்தை சேர்ந்த 160 வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் உள்ள புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்தியாவிலிருந்து 160 ஆயுதப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இலங்கைக்கு பரஸ்பர விஜயம் செய்துள்ளனர்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக ஜூன் 15 - 18 காலப் பகுதியில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான, இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் இலங்கைக்கு வரும் இந்திய குழுவினரை வரவேற்பதற்கும் மற்றும் இலங்கைக் குழுவினரை இந்தியாவிற்கு வழியனுப்பி வைப்பதற்குமாக விமான நிலையத்தில் இருந்துள்ளனர்.

யாத்திரையின் போது, இலங்கை ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் புனித மாகாபோதி ஆலயம், 80 அடி உயர புத்தர் சிலை, ராஜ்கிர் மற்றும் நாலந்த அருங்காட்சியகம் என்பவற்றுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை இராணுவத் தளபதியின் ஒரு விசேட வேண்டுகோளின் பெயரில் வரும் இந்திய குழுவினர் இலங்கையில் உள்ள முக்கியமான இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இது, கண்டியில் புனித தந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து வணக்கம் செலுத்துதல் மற்றும் காலிக்கான விஜயம் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும்.

இந்திய ஆயுதப் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒரு பெரும் குழு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்திய விமானப் படையின் C - 17 குளோப்மாஸ்டர் விமானம் இலங்கை மற்றும் இந்திய பயண குழுவினரின் போக்குவரத்துக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாச்சார மற்றும் வரலாற்று ஈடுபடுதல்களுக்கு மேலதிகமாக, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கிடையில் பெரியளவிலான இடை தொடர்புகளும் இதன்போது மேற்கொள்ளப்படும்.

ஓர் ஆழமான மற்றும் வலுவான தொழில்சார் உறவுகளை ஏற்கனவே பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளின் ஆயுத படைகளுக்கிடையில் தனிப்பட்ட மற்றும் நிலையான பிணைப்புகளுக்கான ஒரு சிறந்த தளத்தினை இது வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளினதும் ஆயுதப்படை வீரர்களிற்கிடையில் இடைத்தொடர்பு மற்றும் நட்பு என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த விசேட யாத்திரை ஏற்பாடு கடந்த வருடம் ஆரம்பமாகியிருந்தது.

இந்த வருட யாத்திரை, கடந்த வருடத்தை விட இரண்டிலிருந்து நான்கு என அதிகரித்த நாட்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிலிருந்து 160 ஆயுதப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இலங்கைக்கு பரஸ்பரம் விஜயம் செய்தல் என்பதையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.