முஸ்லிம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்வேன்! உறுதிமொழி எடுத்து கொண்ட நபரின் புதிய தகவல்கள்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் விசாரணைகளின் பின், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி - தனிபொல்கஹா பகுதியை சேர்ந்த 29 வயதான மொஹமட் காதர் மொஹமட் ஷஸ்னி என்ற இந்த சந்தேகநபர், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தாகவும் முஸ்லிம் தேசத்திற்காக உயிரை தியாகம் செய்வேன் என சஹ்ரான் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பியகம பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக தொழில் புரிந்துள்ள இந்த நபர், பிள்ளைகளுக்கு ஆங்கில வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார்.

மல்வானையில் உள்ள சந்தேகநபரின் மனைவியின் வீட்டில் நடந்த விருந்தொன்றில் சஹ்ரான் மற்றும் தெஹிவளையில் குண்டை வெடிக்க செய்த ஜமீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் விருந்தின் பின் பியகமயில் உள்ள மண்டபம் ஒன்றில் கருத்தரங்கொன்றை நடத்தியுள்ளதாகவும் சந்தேகநபர் தொடர்பில் விசாரணை நடத்திய காலி பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அங்கு ஒரு நாள் பயிற்சியை பெற்ற பின்னர், மாத்தளையில் இரண்டு இடங்களில் ஆயுத பயிற்சிகளை பெற்றுள்ளதாகவும் அந்த பயிற்சியில் 25 பேர் கொண்ட அணியினர் கலந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் தேசத்திற்காக உயிரை தியாகம் செய்வதென உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.

சஹ்ரானின் சமய போதனைகளில் கலந்து கொண்ட அனைவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு உதவும் வகையில் சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கையளித்துள்ளதாகவும் உதய செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளில் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.