அமெரிக்க இராணுவம் இலங்கையில் முகாமை அமைக்க போவதாக கூறும் கதை பொய்யானது: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

அமெரிக்க இராணுவம் இலங்கைக்குள் நுழையவோ, நாட்டில் முகாம்களை அமைக்கவோ இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அல்லது வேறு நாடுகளுடன் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை அரசாங்கம் செய்யாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் றே்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர், அரசாங்கத்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவுடன் திருட்டுத்தனமான உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கம் அப்படியான திருட்டு உடன்படிக்கைகளை செய்யவில்லை. எதிர்காலத்திலும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு இணங்க போவதில்லை. கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்.

எமது அரசாங்கம் இப்படியான உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள தயாரில்லை. அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள் நுழையவும் முகாம்களை அமைக்கவும் இடமளிக்கப்படாது.

பாதுகாப்பு தொடர்பாக உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படுமாயின், அது ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே அதனை செய்வார். நாங்கள் அப்படியான உடன்படிக்கைகளில் கையெழுத்திட மாட்டோம் எனவும் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers